புனித சந்தன மாதாவை நோக்கி ஜெபம்
இறையருள் நிறைந்த புனித சந்தன மாதாவே! கன்னி மரியாளின் எழில்மிகு ஒப்பற்ற தாயே ! சந்தன மாதா ஆலயத்தில் வீற்றிருந்து உமது அன்பின் அருளால் அண்டி வரும் மக்களுக்கு இறைவனின் அருட்கொடைகளை வாரி வழங்கி வருகின்றீர். உமக்கே எங்கள் வணக்கமும் நன்றியும் உரித்தாகுக! தாயே இறைவனால் நீர் எவ்வளவோ நேசிக்கப்பட்டிருக்கிறீர். நீர் கேட்கும் மன்றாட்டை அவர் தர மறுப்பதில்லை என அறிந்திருக்கிற நாங்களும் உமது திருவடி அருகில் நிற்கின்றோம் . இறைவனின் அருளை மிகுதியாக கொண்ட புனித சந்தன மாதாவே !நாங்கள் இறையருள் நிறைந்த இல்லத்தினராய் வாழ்ந்து நீர் வளம் பெற்ற மரம் போல் இவ்வுலக வாழ்விலே நற்கணி தந்து எங்களுக்கு இறைவன் தந்த மக்கள் செல்வங்களை நன்னெறியில் நடத்த அருள் புரியும். நாங்கள் அருளிலும் அறிவிலும் அன்பிலும் அமைதியிலும் வாழ்ந்து வளம் பெற செய்தருளும். உலக வாழ்க்கையிலே குறுக்கிடும் அனைத்து தீமையிலும் இருந்தும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்திட இறைவனிடம் பரிந்து பேசுவீராக தாயே ஆமென்!
புனித சந்தனத்தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சந்தனத்தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அனைத்து புனிதர்களே, புனிதர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் .
புனித சந்தன மாதா நவநாள் ஜெபம்
தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே, ஆமென். மரியன்னைக்கு அன்னையாகிய புனித சந்தன மாதாவே , உமது பிள்ளைகளுக்காக மன்றாடும் ….(3)
குரு : இரக்கமிகு இறைவனின் அருள் வரமிக்கவளாய்! சுரக்கும் அருள் ஊற்றாகும் கன்னிமரியின் அன்னையராய் வேண்டுவோருக்கு வேண்டும் வரமருளும் தாயாய் அதோ! உதயகால சுடரொளிபோல் ஒளி வீசி பவனி வரும் மரியன்னைக்கு தாயாகிய. புனித சந்தன மாதாவே .
எல் : உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
குரு : இறைவா! என் இறைவா ! ஆர்வமுடன் உம்மை நாடுகிறேன். நீரின்றி வறண்டு கிடக்கும் நிலம் , நீரை நோக்கி இருப்பது போல், என் உள்ளம் உம்மீது வேட்கை கொண்டுள்ளது. என் உடலும் உம்மை ஆசிக்கின்றது .
எல் : வல்லமை மிக்க இறைவன் மீது என் உள்ளம் பூரிக்கின்றது .
குரு : ஏனெனில்! தம் திருவுளப்படி நடந்த புனித சந்தன தாயின் வழியே எனக்கு அருள் மழை பொழிந்தார். எனவே கரம் நீட்டிக் குரலெழுப்பும் மக்கள் அனைவருமே அவளை பேறுடையாள் எனப் போற்றுவர் .
எல் : ஏனெனில்! வல்லமையும் மாட்சிமையும் மிக்கவர்! அவர் வழியே என்னில் பெரும் காரியங்களை நிகழ்த்தினார். இறையருள் எவ்வளவோ மேலானது .
குரு : இறைவனின் இரக்கப் பெருக்கம் இவள் வழியே புனித வாழ்வு கொள்வோர் மீது இருக்கின்றது .
எல் : இறைமகன் இயேசு தம் அருள் வரங்களை இத்தாயின் வழியே மன்றாடுவோர் மீது ஏராளமாய் பொழிந்தருளினார் .
குரு : வல்லமை படைத்தவர் தாழ்ந்த உள்ளங்களை இத்தாயின் வழியே உயர்த்தியுள்ளார்.
எல் : கண்ணீர் பெருக மனம் வருந்தும் எங்களின் துயர்களை/ புனித சந்தன தாயின் வழியே துடைத்திட கருணைக்கூர்ந்தார் .
குரு : இறைவா! என் குரலைக் கேட்டருளும். என் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்தருளும் .
எல் : புனித சந்தன தாயின் வழியே எங்கள் வேண்டுதலை கேட்டருளும்.
குரு : தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
எல் : தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக . ஆமென்.
குரு : இரக்கமிகு இறைவனின் அருள் வரமிக்கவளாய்! சுரக்கும் அருள் ஊற்றாகும் கன்னிமரியின் அன்னையராய் வேண்டுவோருக்கு வேண்டும் வரமருளும் தாயாய், அதோ! உதயகால சுடரொளிபோல் ஒளி வீசி பவனி வரும் மரியன்னைக்கு தாயாகிய. புனித சந்தன மாதாவே .
எல் : உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
புனித சந்தன தாயை நோக்கி மன்றாட்டுகள்
குரு : இறையருள் நிறைந்திடும் புனித சந்தன தாயே! உலக மீட்பரின் அன்னை கன்னி மரியாளுக்கு தாயாக இறைவனால் நீர் தெரிந்து கொள்ளப்பட்டீரே! இறை இயேசுவிடம் வேண்டி எங்கள் ஆன்மா வாழ்வின் புனிதத்தை நாங்கள் அறியவும் நீர் அனுபவித்த இறையன்பை நாங்கள் உணர்ந்து என்றும் அருள் வாழ்வின் நிலைத்திடும் வரத்தை பெற்றுத் தர வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம் .
எல் : புனித சந்தன தாயாம் அன்னம்மாள் வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
குரு : இறையருள் நிறைந்திடும் புனித சந்தன தாயே! எங்களது இல்லற வாழ்விலே இறைவழி நடந்திட நல்லதொரு வழிகாட்டியாக இறைவனால் எமக்களிக்கப்பட்டீரே! நாங்கள் பாவ வாழ்விற்கு இறந்து நித்திய வாழ்வுக்கு உயிர் பெற்று எழும் வரத்தைப் பெற்றுத்தர உம்மை மன்றாடுகிறோம்.
எல் : புனித சந்தன தாயாம் அன்னம்மாள் வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
குரு : இறையருள் நிறைந்திடும் புனித சந்தன தாயே! அழிந்து போகும் உலக இன்பங்களுக்கு எங்கள் உடலை பலி கொடுக்காது. எங்கள் உள்ளமும் உடலும் பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருக்கும் வண்ணம் உம்மை போல் நிறைவாழ்வு நடத்த அருள் புரிய உம்மை மன்றாடுகிறோம்
எல் : புனித சந்தன தாயாம் அன்னம்மாள் வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
குரு : இறையருள் நிறைந்திடும் புனித சந்தன தாயே! உலக வாழ்விலே துன்பங்கள் சூழ்ந்திடும் போது அவைகளை பொறுமையோடு ஏற்று புனித வாழ்வுக்கு அடித்தளமாக்கி உமது நேரிய வழியை நாங்களும் பின்பற்றி வாழ வரமருள உம்மை மன்றாடுகிறோம் .
எல் : புனித சந்தன தாயாம் அன்னம்மாள் வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
குரு : இறையருள் நிறைந்திடும் புனித சந்தன தாயே! இல்லற வாழ்வை புனிதப்படுத்த இறைவன் மாட்டில் தனித்த பக்தி பற்றுதலோடு நடக்க திருவுளம் கொண்டீரே! நாங்களும் இல்லற வாழ்வின் மேன்மையையும், கடமையையும் உணர்ந்து இறையன்பில் நிறைவாழ்வு நடத்த வரமருள உம்மை மன்றாடுகிறோம் .
எல் : புனித சந்தன தாயாம் அன்னம்மாள் வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
குரு : இறையருள் நிறைந்திடும் புனித சந்தன தாயே! நீர் அன்றாட வாழ்விலே ஒவ்வொரு செயலிலும் இறை சித்தமென உணர்ந்து இறைவனின் புகழுக்காக நடக்க அறிந்திருந்தீரே! நாங்களும் ,எங்கள் எண்ணம் ,சொல், செயல் அனைத்திலும் இறைசித்தம் எதுவென உணர்ந்து வாழ அருள் புரிய உம்மை மன்றாடுகிறோம் .
எல் : புனித சந்தன தாயாம் அன்னம்மாள் வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
குரு : இறையருள் நிறைந்திடும் புனித சந்தன தாயே! இறைவன் எங்கள் நல்வாழ்வுக்கென தந்த கால்நடைகள், நிலபுலன்கள் ,மக்கள் செல்வங்கள், வாகனங்களை உமது அருளாசீரால் நிரப்பி உம்மை அண்டி வரும் அனைத்து மக்களையும் பாதுகாத்து வழிநடத்த உம்மை மன்றாடுகிறோம்.
எல் : புனித சந்தன தாயாம் அன்னம்மாள் வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.